உலக பிரசித்தி பெற்ற அத்திவரதர் புகழ் காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் தைப்பூச தெப்போற்சவம் நடைபெற்று வருகிறது. அதை யொட்டி அனந்தசரஸ் குளத்தில் தெப்போற்சவம் முடிந்த பின்பு பெருந்தேவி தாயார் உடன் வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உள் புறப்பாடு வர நேற்றிரவு (ஜன-29) எழுந்தருளினார்.
வரதராஜ பெருமாள் கோயிலில் உற்சவங்களின் போது சுவாமி முன்பு பிரபந்தம் பாடுவதில் இருபிரிவு அய்யங்கார்களிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு, நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டு, பல்வேறு உத்தரவுகள் வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தென்கலை பிரிவினர் முன் வரிசையிலும், வடகலை பிரிவினர் பின் வரிசையிலும், பிரபந்தம் பாடவேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. அதனை நடைமுறைப்படுத்தி வந்த நிலையில் வடகலை பிரிவினர் மேல்முறையீடு செய்து அந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை பெற்றிருந்தனர்.
இந்நிலையில் கோயில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இரு பிரிவினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி உற்சவத்தின்போது சுவாமி முன்பு இரு பிரிவுகளிலிருந்து தலா ஐந்து பேர் பிரபந்தம் பாடவேண்டும் என அறிவித்திருந்தது.
தை மாத தெப்போற்சவம் நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் பிரபந்தம் படுவதில் பிரச்னை எழுந்தது. நேற்று (ஜன.29) நடைபெற்ற உள் புறப்பாட்டின் போது, சுவாமி முன்பு கூடிய தென்கலை பிரிவினர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனக் கூறி கோயில் செயல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சுவாமி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில் செயல் அலுவலர் சுவாமி முன்பு ஐந்து, ஐந்து பேர் பிரபந்தம் பாடலாம் என கூறியும் கேட்காமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், காவல்துறையினர் தென்கலை பிரிவினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
உற்சவத்தின்போது தொடர்ந்து ஐய்யங்கார்கள் இடையே தள்ளு முள்ளு பிரச்னை ஏற்படுவதைக் கண்ட பக்தர்கள் முகம் சுளித்து சென்றனர். வரதராஜ பெருமாள் கோயிலில் தொடர்ந்து இரு பிரிவினரிடையே மோதல், தள்ளுமுள்ளு, ஏற்படுவதை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசும், நீதிமன்றங்களும் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.