தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் அச்சமடைந்த காரணத்தால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரும் முன்வரவில்லை.
ஆனால், கரோனா இரண்டாம் அலைக்காரணமாக தற்போதைய சூழலில் தொற்று அதிகரித்து, பலரும் உயிரிழந்துவருகின்றனர்.
இந்நிலையில், கரோனாவிற்கு எதிரான ஒரே பேராயுதமாகதி தடுப்பூசி மட்டுமே உள்ளதை அறிந்துகொண்ட பொதுமக்கள் தற்போது தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டிவருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் இதுவரையில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 549 நபர்களுக்குக் கரோனா தடுப்பூசி போடப்படுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அரசு தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 10 இடங்களில் இன்று (ஜூன் 5) தடுப்பூசி முகாம் நடைபெற்றுவருகிறது.
இரு நாள்களுக்கு முன்பு அரசு அனுப்பிவைத்த ஒன்பதாயிரம் தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவடைகிறது. மேலும், கூடுதலாக தடுப்பூசி வந்தால் மட்டுமே நாளை (ஜூன் 6) தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசி போடப்படும் எனச் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாட்டால் 28 ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போடப்படாமல் ஏராளமான பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.
தற்போது மீண்டும் தடுப்பூசி தட்டுப்பாட்டால் நாளைய தினம் முதல் தடுப்பூசி போட முடியாத நிலை உருவாகியுள்ளதால் அரசு உடனடியாகத் தடுப்பூசி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.