உத்திரமேரூர் அடுத்த நான்சிபுரத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன்(70). ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியரான இவர், இன்று மாலை சுமார் 4 மணி அளவில் தனது மனைவியின் மருத்துவச் செலவிற்காக, அவரது மகன் அனுப்பிய ஐம்பதாயிரம் ரூபாயை உத்தரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் எடுத்துள்ளார்.
பணத்தை எடுத்துக்கொண்டு வெளியில் வந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சாலையில் சிதறிக்கிடந்த பத்து ரூபாய், 50ரூபாய் நோட்டைக் காட்டி, இது உங்களுடையதா என்று ரங்க நாதனின் கவனத்தை திசைத்திருப்பியுள்ளார்.
ரங்கநாதன் அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு அருகில் இருந்தவர்களிடம் இந்தப் பணம் உங்களுடையதா என்று கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில், அந்த அடையாளம் தெரியாத நபர் ரங்கநாதனின் இரு சக்கர வாகனத்தில் இருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு தயாராக நின்று கொண்டிருந்த, மற்றொரு நபரின் பைக்கில் வேகமாக ஏறிச் சென்றார்.
இந்த காட்சிகள் அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் இதுபோன்று தொடர்ச்சியாக கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆளுமைமிக்க தலைவராக மாறுவாரா ரஜினி?