காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் எம்.ஜி.ஆர் நகரில் அமைந்துள்ள வீட்டின் பூட்டை 4 சவரன் தங்க நகைகள், 53 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை, அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.
எம்.ஜி.ஆர் நகர் ராமானுஜர் தெருவில் வசித்து வரும் தம்பதி மூர்த்தி (62)- துரைராணி (56) தம்பதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பூந்தமல்லி அருகில் உள்ள தனது மகள் வீட்டிற்கு மூர்த்தி, துரைராணி இருவரும் சென்றுள்ளனர்.
பின்னர் நேற்றிரவு வீடு திரும்பியுள்ளனர். வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி தம்பதி உள்ளே சென்று பார்த்த போது, பீரோவின் கதவு உடைக்கப்பட்டு அதிலிருந்த 53 ஆயிரம் ரூபாய் பணம், 4 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மூர்த்தி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர். அதில், அருகாமையில் மற்றொரு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்தது தெரியவந்தது. நல்வாய்ப்பாக அந்த வீட்டில் பொருட்கள் எதுவும் மாயமாகவில்லை.
தொடர்ந்து, அத்தெருவில் அமைந்துள்ள ஒரு வீட்டின் சிசிடிவி கேமரா பதிவான காட்சிகளை காவல் துறையினர் சோதித்தபோது, அதில் மூன்று இளைஞர்கள் முகக்கவசம் அணிந்தபடி கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது கண்டறியப்பட்டது. இந்தக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூவர் கைது