காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை தாமல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது வீலிங் செய்து விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், 45 நாள் சிறையில் இருந்த பிறகு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.
உயர் நீதிமன்றம் ஜாமீன் பெற்ற நிலையில் கடந்த நவம்பர் 4ஆம் தேதி சிறையில் இருந்து டிடிஎஃப் வாசன் விடுதலை செய்யப்பட்டார். முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றம் காஞ்சிபுரம் பாலுக்செட்டிசத்திரம் காவல் நிலையத்தில் ஆஜராகி மூன்று வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று (நவ. 6) பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் நிவாசன் முன்னிலையில் ஆஜராகி நீதிமன்ற உத்தரவு பிரதியை வழங்கி நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்திட்டார். தினமும் காலை 10:30 மணி அளவில் பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடும் நிபந்தனையின் படி முதல் நாளாக டிடிஎஃப் வாசன் காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டார்.
இந்நிலையில் காவல் நிலையத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த டிடிஎப் வாசனை சூழ்ந்து கொண்டு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், "செஞ்சது போதும் அண்ணே, இப்ப கெஞ்சுவீங்க, அப்புறம் மிஞ்சிவீங்க, காலையில் இருந்து சாயந்தரம் வரைக்கும் நின்றோம் பைட் கொடுங்க என்று கேட்டார்கள்.
உங்களால முடிஞ்சத செஞ்சிட்டீங்க, ரொம்ப நன்றி. அது உங்களுக்கு ஒண்ணுமே இல்ல, நமக்கு தான் கஷ்டம்" என்று தெரிவித்துவிட்டு காரில் ஏறி சென்று விட்டார். டிடிஎஃப் வாசன் காவல் நிலையம் வந்துள்ளதை அறிந்து கொண்ட இளம் ரசிகர்கள் ஏராளமானோர் காவல் நிலையம் முன்பு குவிந்தனர்.
இதைத்தொடர்ந்து காரில் ஏற வந்த டிடிஎஃப் வாசனுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். டிடிஎஃப் வாசனை காண வந்த அவரது ரசிகர்களை காவல் துறையினர் ஓடிச் சென்று விரட்டி அடித்தனர்.
இதையும் படிங்க: 50 அடி நீள குச்சிகளூடன் தினசரி 92 கி.மீ ஆபத்து பயணம்.. பதைபதைக்கும் வீடியோ!