காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் இயங்கிவரும் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா ராஜலட்சுமி கல்வி குழும தலைவர் டாக்டர். தங்கம் மேகநாதன் தலைமையில் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று 1295 மாணாக்கர்களுக்கு பட்டங்கள், பதக்கங்கள் வழங்கி வாழ்த்திய தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையில், புத்தாக்க மனப்பாங்கு மிக்க இளம் தலைமுறையினரை பார்க்க வந்ததில் மிக்க மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார். வேகமாக உருவாகி வரும் புதிய இந்தியாவை கட்டமைக்க உள்ளவர்கள் மாணவர்களே என்றார். இந்தியாவை புகழின் உச்சிக்கு எடுத்துசெல்ல மாணவர்கள் தோள் கொடுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், 'சொத்துக்களை இழந்தால் அவற்றை மீண்டும் சம்பாதித்து விடலாம். ஆரோக்கியத்தை இழந்தால் ஓரளவு பாதிப்பு ஏற்படும், முயற்சித்தால் மீண்டு விடலாம். ஆனால் நற்பண்புகளை இழந்தால் வாழ்க்கையே இழந்தது போலாகும்' என தனது ஆசிரியர்கள் அறிவுறுத்தியதாக நினைவு கூர்ந்தார்.

தற்காலம் போன்று எதிர்காலம் இருக்காது என குறிப்பிட்ட ஆளுநர், குவாண்டம் கம்ப்யூட்டிங், ஐஓடி, ரோபோடிக்ஸ் போன்ற நவீன கால தொழில்நுட்பங்களை கற்பதன் மூலம் சவால்களை முறியடித்து வாழ்வில் முன்னேற முடியும் என குறிப்பிட்டார், மேலும் ஒற்றுமையுடன் பணியாற்றி வாழ்வில் வெல்ல வேண்டும் என்ற முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் கூறியதை போல மாணவர்கள் செயல்பட்டு சிகரங்களை தொட தான் வாழ்த்துவதாக கூறினார்.
நிகழ்ச்சியில் டாஃபே நிறுவனத்தின் நிதி மற்றும் முதலீட்டு யுக்திகள் பிரிவு தலைவர் எஸ்.சந்திரமோகன். கல்லூரி முதல்வர் எஸ்.என்.முருகேசன் பேராசிரியர்கள் உள்பட மாணவர்கள் பெற்றோர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.