செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் அதிமுக மத்திய மாவட்ட செயலாளர் எஸ். ஆறுமுகம் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பின்னர் அவர் பேசுகையில், "மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் கொடுத்தது அதிமுக ஆட்சிதான். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இரண்டு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கியதாக மு.க. ஸ்டாலின் கூறுவது பொய். தமிழ்நாடு என்பது மதச்சார்பற்ற நாடாக இந்தியாவில் உள்ள மாநிலங்களில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.
இதனைச் சீர்குலைப்பது மு.க. ஸ்டாலினின் முதல் நோக்கமாகும். தற்போது தமிழ்நாட்டை ஆட்சி செய்துவரும் எடப்பாடி கே. பழனிசாமி ஒரு வல்லமைமிக்க முதலமைச்சராகத் திகழ்ந்துவருகிறார். உதாரணமாக, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக அறிவித்தது. மீத்தேன், ஸ்டெர்லைட் போன்ற திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு அமுல்படுத்தவிடாமல் தடுப்பது.
பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டியது. இதுபோன்ற பல்வேறு சாதனைகள் அடுக்கிக் கொண்டே போகலாம். எனவே 2021இல் அதிமுக வலிமை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை” என்றார்.
பின்னர் பயனாளிகளுக்கு அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.