காஞ்சிபுரம்: உத்தரமேரூர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் கொள்ளை நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவிட்டார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.கடந்த இரண்டு நாட்களாக தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பிடிப்பட்ட இளைஞர்
இந்நிலையில் காரணைமண்டபம் கூட்டு சாலையில் வாகன தணிக்கை நடைபெற்றது. அப்போது காவலர்களை கண்டவுடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்ற இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர் களியாம்பூண்டி லாந்தர் காலணியைச் சேர்ந்த புஷ்பராஜ் (26) என்பதும், இவர் ஏற்கெனவே பல திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.
திருடியதை ஒப்புக்கொண்ட கொள்ளையன்
மேலும் அவர் கலா, மானாமதி அசோக்குமார், களியாம்பூண்டி தங்க பஞ்சாட்சரம் ஆகியோர்களின் வீடுகளில் திருடியதை ஒப்புக்கொண்டார்.
பின்னர் அவரை கைது செய்த காவல்துறையினர், ரூ.3.5 லட்சம் மதிப்பிலான 9 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
சிறையில் அடைப்பு
பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி புஷ்பராஜ் காஞ்சிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். துரிதமாக செயல்பட்டு கொள்ளையனை பிடித்த காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ஜோலார்பேட்டையில் கோயில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை