காஞ்சிபுரம்: உத்திரமேரூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,500 மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இந்தப்பள்ளியில் 50ஆண்டுகள் பழமையான பல்வேறு பள்ளி வகுப்பறை கட்டடங்கள் உள்ளன. இவை அனைத்தும் பழுதடைந்தும் சிதிலமடைந்தும் உள்ள நிலையில் மாணவிகள் அச்சத்தோடு தான் அண்மைக்காலமாக கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தப்பள்ளியில் இன்று மாலை பள்ளி விடும் வேளையில் மாணவிகள் வீட்டிற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தபொழுது பள்ளியின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் அங்கு நின்று கொண்டிருந்த சில மாணவிகள் அலறியடித்து ஓடியதால் பள்ளியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இது குறித்து அறிந்ததும் அப்பள்ளியின் தலைமையாசிரியை மற்றும் பிற ஆசிரியர்கள் இடிந்து விழுந்த அந்த இடத்தை சுற்றி மேஜைகளை வைத்து மாணவிகளை பாதுகாப்பாக வீட்டிற்கு செல்ல வழி வகை செய்தனர். இதே போல இந்தப் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அப்பள்ளியின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த பழமையான பள்ளிக் கட்டடங்களை அகற்றுவதற்கு உத்தரவு வந்த பிறகும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அலட்சியம் காட்டி வருவதே இது போன்ற விபத்துகளுக்கு காரணம் என பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் பள்ளி மாணவிகளுக்கு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் இந்தப் பள்ளி கட்டடத்தை உடனடியாக இடிக்க நடவடிக்கை எடுத்துப் புதிதாக கட்டடம் கட்ட வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க:திமுக எங்களுக்கு பங்காளி உறவு முறை... முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு