தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் பரவல் உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு இன்று (ஏப். 10) முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
குறிப்பாக தேநீர்க் கடைகள், உணவகங்களில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, பேருந்துகளில் நின்றுகொண்டு செல்லக்கூடாது, திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கரோனா நோய்த்தொற்றுப் பரவலில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. மாவட்டத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் நோய்த்தொற்று பாதிப்பால் அவதிப்பட்டுவருகின்றனர்.
இன்றுமுதல் கரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளதை அடுத்து பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து செல்கின்றனர்.
செங்கல்பட்டு நகராட்சி சார்பில் எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். மேலும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய தவறினால் அதிகளவில் அபராதம் விதிக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ’பேரணிகளால் அதிகரிக்கிறதா கரோனா?’ குற்றம் சாட்டும் சிவசேனா, மறுப்பு தெரிவிக்கும் பாஜக