காஞ்சிபுரம் பகுதிகளில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்று மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகமும், பெரு நகராட்சி நிர்வாகமும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியாகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
அந்தவகையில், மக்கள் அதிகம் கூடும் கடைகளும், வணிக நிறுவனங்களும் செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பூக்கடை சத்திரம் பகுதியில் செயல்பட்டு வந்த பூ மார்க்கெட்டை இட நெருக்கடி காரணமாகவும், அதிக அளவில் மக்கள் கூடுவதாலும் மூட மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் பூக்கடை சத்திரம் பூ மார்க்கெட்டை மூடினர். இதனால் வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், அருகிலுள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தங்களின் சொந்த செலவில் தற்காலிகமாகப் பூ மார்க்கெட்டினை அமைத்தனர்.
கரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள இந்தத் தற்காலிகப் பூ மார்க்கெட் இன்று(ஏப்.29) முதல் செயல்பட்டுவருகிறது. பொது மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து பூக்களை வாங்கிச் செல்கின்றனர்.