காஞ்சிபுரம் மாவட்டத்தின் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருவோர் நிலவரம், நோயாளிகளுக்கு வழங்கும் ஆக்சிஜன் நிலவரம், ஆக்சிஜன் உடன் படுக்கை வசதிகள் ஆகியவற்றை குறித்து மாவட்ட ஆட்சியர் தமகேஸ்வரி ரவிக்குமார் நேற்று (ஏப். 28) திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1% சதவீதமாக இருந்த கரோனா தொற்று தற்போது 3.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் தற்போது 2,805 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றன.
அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் 317 உள்ள நிலையில், மேலும் 40 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 163 பேர் சிகிச்சைபெற்று வருகின்றன. அதுபோல தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
அதிகரித்து வரும் கரோனா தொற்றை எதிர்கொள்ளும் வகையில், புதியதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டிடத்தில் 6,000 லிட்டர் ஆக்சிஜனை வசதி கொண்டுள்ள நிலையில், 250 படுக்கைகள் அதிகரிக்கவும், ஆக்சிஜன் அளவை மேலும் அதிகரிக்கவும் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக அரசு மருத்துவமனை குறித்து, பொதுமக்கள் அவநம்பிக்கை கொள்ளும் வகையில் தவறான வதந்திகளை பரப்புவோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என எச்சரிக்கை விடுத்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், சுகாதார மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ஜீவா, மருத்துவமனை நிலைய அலுவலர் பாஸ்கர் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.