காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் அமைந்துள்ள ஹூண்டாய் நிறுவனம் 1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 25 ஆண்டுகளில் ஒரு கோடி கார்களை உற்பத்தி செய்து அந்நிறுவனம் சாதனை படைத்துள்ளது. 27 வகையான கார்களைத் தயாரிக்கும் இந்நிறுவனத்தில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஹூண்டாய் கார் தொழிற்சாலையில், இதுவரை ஒரு கோடி கார்கள தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஒரு கோடியாவது காரை பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், முன்புற பகுதியில் வாழ்த்துகள் என எழுதி கையெழுத்திட்டார்.
மேலும் அதி நவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட முன்மாதிரி மின்சார காரினை பார்வையிட்ட முதலமைச்சர், தொழிற்சாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்றினையும் நட்டுவைத்தார்.
![stalin-says-tamil-nadu-will-be-transformed-into-a-state-with-a-large-number-of-factories](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12312524_car.png)
ஹூண்டாய் தொழிற்சாலையின் சமூக பங்களிப்பு திட்ட நிதியல் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பின் தங்கிய மக்களுக்கு 200 கறவை மாடு வழங்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். மேலும், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு 5 ஆக்ஸிஜன் செறிவூட்டி கருவிகளை மாவட்ட ஆட்சியர் எம். ஆர்த்தியிடம் ஹூண்டாய் நிறுவனம் சார்பில் வழங்கினார்.
அதிக தொழிற்சாலைகளுக்கு காரணம் கருணாநிதி
தொடர்ந்து வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், " 1996ஆம் ஆண்டுக்கு முன்னால் பூந்தமல்லியை கடந்தால் நகரம் இருக்காது. தற்போது, இப்பகுதியில் தொழிற்சாலைகள் இருப்பதற்கு காரணம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான். முதலீடுகள் செய்ய உகந்த மாநிலமாக அடிப்படை திட்டமிடலை தொடங்கியிருக்கிறோம்.
உலகப்புகழ் பெற்ற பொருளாதார அறிஞர்கள் அடங்கிய பொருளாதார குழுவை அமைத்துள்ளோம். இது தொழில் நிறுவனங்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க சாதகமான பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்தையும் மாற்ற முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. தெற்காசியாவிலேயே தொழிற்சாலை மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும்" என்றார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நல மேம்பாட்டு நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன், ஊரக தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். ஆர்த்தி , காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் க. சுந்தர், சி.வி.எம்.பி எழிலரசன், செல்வப்பெருந்தகை, ஹூண்டாய் நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு ப.சிதம்பரம் பாராட்டு!