கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்கள் அதிகம் கூடும் 3 ஆயிரம் சதுர அடி அளவு கொண்ட கடைகளை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அந்தவகையில் காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்குள்பட்ட காந்தி சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டுச் சேலை விற்பனை கடைகளும், பல்பொருள் அங்காடிகள், வீட்டு உபயோக பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் என 50க்கும் மேற்பட்ட கடைகள் நேற்று(ஏப்ரல்.28) மூடப்பட்டது.
இந்நிலையில் முகூர்த்த தினங்களையொட்டி இன்று (ஏப்ரல்.29) பட்டுச்சேலை எடுக்கவும், புது துணிகளை வாங்கவும் ஏராளமான மக்கள், காஞ்சிபுரத்திற்கு வந்திருந்தனர். அப்போது நேற்று (ஏப்ரல்.28) அரசின் உத்தரவுபடி மூடப்பட்டிருந்த பட்டுச் சேலை கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்டவை முன்பக்கம் மூடியிருந்த நிலையில், பின் பக்க கதவைத் திறந்து வைத்து பொதுமக்களிடம் வியாபாரம் செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த காஞ்சிபுரம் பெருநகராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்குச் சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பின்பக்க கதவைத் திறந்து வைத்திருந்த கடைகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதித்தனர். மேலும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை விதிமுறைகளை மீறி பொது மக்களை, அதிக அளவில் அனுமதித்து வியாபாரம் செய்து வந்த 3 பிரபல துணிக்கடைகளுக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.
காஞ்சிபுரத்தில் இன்று (ஏப்ரல்.29) ஒரேநாளில் பல்வேறு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு 70,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.