காஞ்சிபுரம்: சங்குபாணி விநாயகர் கோயில் அருகே கடந்த இரண்டாம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி வழங்க வேண்டி இந்து முன்னணியினர், பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கோயில் அருகே உள்ள பூஜைப் பொருள்கள் விற்பனை செய்யும் பூபதி என்பவர் ஆர்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடையில் கடவுள் படத்துக்கு செருப்பு அணிவித்த நிலையில், அதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்தக் கடையை அடித்து நொறுக்கி பொருள்களை நாசம் செய்தனர்.
இவ்விவகாரத்தில் பாஜகவினர் அளித்த புகாரின்பேரில் கடை உரிமையாளரான பூபதியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கடை உரிமையாளர் பூபதி, அவரது மனைவி ஆகியோரை அடித்து, கொலை மிரட்டல் விடுத்தது, பெண்ணை அவதூறாகப் பேசியது என பூபதியின் மனைவி அளித்த புகாரின் பேரில் சிவகாஞ்சி காவல் துறையினர் ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் இன்று (செப்.05) திடீரென பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டச் செயலாளர் கூரம் விசுவநாதன், நகரத் தலைவர் அதிசயம் குமார், நகர மேற்கு பொதுச் செயலாளர் ஜீவானந்தம், முன்னாள் நகரத் தலைவர் ஜெகதீசன், இந்து முன்னணி கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தேவதாஸ், சந்தோஷ் உள்ளிட்ட ஏழு நபர்களை சிவகாஞ்சி காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா, உடல்நிலை பரிசோதனைகளை மேற்கொண்டு பின்னர் காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2இல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் கைது செய்யப்பட்ட ஏழு நபர்களையும் 10 நாள்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இன்னும் சில நாள்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ள நிலையில் பாஜக, இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரம் காஞ்சிபுரத்தில் நிகழ்ந்துள்ளது.
இதையும் படிங்க : 389 ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது - முதலமைச்சர் வழங்கினார்