காஞ்சிபுரம்: தமிழ்க் கடவுள் முருகனுக்கு முக்கிய நாளாகத் திகழும் தைப்பூச திருநாளான அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் செய்து, முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று திருத்தேர்களில் கோயிலைச் சுற்றிலும் உலா வரும்.
இந்நாளில் காவடி, பால்குடம் எடுத்து பாதயாத்திரையாக வந்து முருக கடவுளை வழிப்பட்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை ஆதிகாலம் தொட்டே இருந்துவருவதால், இந்நாளில் பக்தர்கள் பலரும் விரதமிருந்து காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் பாத யாத்திரையாக நடந்துவந்து வேண்டுதலை நிறைவேற்றுவர்.
பலரும் தைப்பூசத் திருநாளுக்கு முந்தைய தினமே பாத யாத்திரையாக நடந்துவந்து கோயிலில் காத்திருந்து அதிகாலையில் நடக்கும் திருக்கல்யாண உற்சவத்தையும் திருத்தேர் உலாவையும் காண்பர். ஆனால் இந்த வருடம் தைப்பூசத் திருவிழா கரோனா வைரஸ் பாதிப்பு பரவல் காரணமாகப் பக்தர்களின்றி நடைபெற்றது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள மொளச்சூர் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்குத் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
கரோனா வழிகாட்டு விதிமுறைகளின்படி தைப்பூச தினமான நேற்று கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், இன்று தைப்பூச விழாவையொட்டி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
ஸ்ரீ வள்ளி தேவசேனா சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் நடைபெற்ற தைப்பூச விழா சிறப்புப் பூஜையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா கலந்துகொண்டு வள்ளி, தெய்வானையுடன் காட்சி அளிக்கும் முருகப்பெருமானுக்கு 35 லட்ச ரூபாய் மதிப்பில் 4 அடி உயரமும் 35 கிலோ எடையும் கொண்ட வெள்ளி கவசத்தையும், தங்க கண் மலர்களையும் காணிக்கையாக வழங்கி சுவாமி தரிசனம் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்டச் செயலாளர் மொளசூர் பெருமாள், அமமுக நிர்வாகிகள் நாராயணசாமி, ரஜினி குமாரவடிவேல், சக்திவேல், திருவேங்கடம், ஜெகதீஷ், பார்த்தசாரதி, எல் ராஜேந்திரன், காந்தூர் சிவா, ஸ்ரீபெரும்புதூர் சதீஷ் நரேஷ, ராதாகிருஷ்ணன், கல்யாணம் ஜெயகாந்தன், உள்ளிட்ட ஏராளமான முக்கிய நிர்வாகிகளும் கிராம பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: வேதனையில் டெல்டா விவசாயிகள்: துயர் துடைக்குமா தமிழ்நாடு அரசு?