காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் மற்றும் ஊத்துக்காடு பகுதியில் மெடோ ஆக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிட்டெட் பங்குதாரர்களான சசிகலாவின் உறவினர்கள் ஜே. இளவரசி, வி.என். சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமாக 17 இடங்களில் 144.75 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ. 300 கோடி மதிப்புடைய நிலங்கள் உள்ளது.
இந்த நிலங்களை அரசுடைமையாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மேற்கூறிய நிலத்தை பறிமுதல் செய்து, தமிழ்நாடு அரசின் வாருவாய் கணக்கில் சேர்க்க முதற்கட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு கிதிரிப்பேட்டை கிராமத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான நிலத்தை வருவாய் துறையினர் அரசுடைமையாக்கும் பணியை மேற்கொண்டனர்.
இதனை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மற்றும் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் வித்யா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று விடுதலையான சசிகலா பெங்களூரிலிருந்து தமிழ்நாட்டிற்கு இன்று (பிப். 8) வருகிறார். இதற்கிடையே சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான சுமார் ரூ.300 கோடி மதிப்புடைய நிலத்தை மாவட்ட நிர்வாகம் அரசுடைமையாக்கியுள்ளது, காஞ்சிபுரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திமுக தேர்தல் அறிக்கையும், ஸ்டாலினும் தேர்தல் கதாநாயகர்கள்- கனிமொழி எம்பி