காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் இருசக்கர வாகனம் உற்பத்திசெய்யும் ராயல் என்ஃபீல்டு தொழிற்சாலை இயங்கிவருகிறது. தொழிற்சாலைக்கு ஒசூரிலிருந்து பைக்கின் ஹேண்டல் பார்களை மினி லாரி ஏற்றிவந்து இறக்கிவிட்டு ஒரகடத்திலிருந்து மீண்டும் ஒசூருக்கு வேலூர் தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்றுள்ளது.
அப்போது காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி பகுதியில் மினி லாரி சாலை ஓரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மினி லாரியை கடத்திச் சென்றுவிட்டனர்.
மினி லாரி கடத்திய சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்டம் பூலாபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் மஞ்சுநாதன், பாலுசெட்டிசத்திரன் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அந்தப் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கடத்திச் செல்லப்பட்ட மினி லாரியை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொழிற்சாலையிலிருந்து உதிரி பாகங்களை எடுத்துச்செல்லும் லாரிகள் தொடர்ச்சியாக கடத்தப்பட்டுவரும் சம்பவம் அதிகரித்துவருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக அளவு சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி கண்காணிப்பு ரோந்துப் பணிகளை காவல் துறையினர் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை: பணத்துக்காக குழந்தையை விற்க முயன்ற கும்பல் கைது!