காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குள்பட்ட காவனூர் புதுச்சேரி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்.
இந்த நெல் கொள்முதல் நிலையங்களில், காவனூர் புதுச்சேரி, காரியமங்கலம், நாஞ்சிபுரம், ஆள்வராம்பூண்டி, கம்மாளம்பூண்டி, சோழனூர், அத்தியூர், பாரதிபுரம்,குப்பையநல்லூர், மேனல்லூர் உள்ளிட்ட 20-க்கும்மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட உழவர்கள் தங்களது வேளாண் நிலத்தில் பயிரிட்ட நெற்பயிர்களை அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் வழங்கிவருகின்றனர்.
இந்நிலையில் இந்தாண்டு கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்படவில்லை. இது குறித்து உழவர்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களிடம் தொடர்ந்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த உழவர்கள் உத்திரமேரூர் அச்சரப்பாக்கம் சாலையில் காவனூர் புதுச்சேரி கூட்டுச் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த வருவாய்த் துறையினர், உத்திரமேரூர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின்பேரில் உழவர்கள் கலைந்துசென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.