பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முல்லை கதாபாத்திரம் மூலம் மக்களிடையே பிரபலமானவர் 28 வயதான சின்னத்திரை நடிகை சித்ரா. இவர் ஹேம்நாத் என்பவரை கடந்த அக்டோபர் 19 ஆம் தேதியன்று பதிவுத்திருமணம் செய்து கொண்டார். மேலும் ஜனவரி மாதம் இவர்களுக்கு முறைப்படி திருமணம் நடைபெறவிருந்த நிலையில், படப்பிடிப்பிற்காக நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் கணவர் ஹேம்நாத்துடன் தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 9 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு படப்பிடிப்பு முடிந்து விடுதிக்கு திரும்பிய சித்ரா, ஹேம்நாத்திடம் தான் குளிக்கச் செல்வதாகக் கூறிவிட்டு, வெகுநேரமாகியும் அவர் வெளியே வராததால் மாற்றுச் சாவியை கொண்டு அறையைத் திறந்து பார்த்த போது, மின்விசிறியில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்த அவரது உடற்கூராய்வு முடிவும் அவர் தற்கொலை செய்து கொண்டதை உறுதி செய்தது.
இந்நிலையில், திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் பெண் இறந்து விட்டால், வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாரிடமும், அவரது கணவரின் குடும்பத்தாரிடமும் விசாரணை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் நடிகை சித்ரா இறப்பு குறித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ, இன்று நடிகை சித்ராவின் குடும்பத்தாரிடம் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் விசாரணை மேற்கிறார்.
இதற்காக ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு நடிகை சித்ராவின் தாயார் விஜயா, தந்தை காமராஜ், அக்கா சரஸ்வதி ஆகிய மூவரும் இன்று வந்தனர். நடிகை சித்ரா பதிவு திருமணம் செய்து கொண்டதற்கான ஆவணங்களை சமர்பித்து வரதட்சணை விவகாரங்கள் குறித்த தகவல்களையும் கோட்டாட்சியரிடம் சித்ராவின் குடும்பத்தார் தெரிவிக்க உள்ளனர். ஹேம்நாத் தான் தனது மகளை அடித்து கொன்று விட்டதாக சித்ராவின் தாயார் விஜயா கூறியிருந்த நிலையில் இவ்விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: தேசிய விருதுபெற்ற கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்!