காஞ்சிபுரம் வெள்ளை கேட் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி விடுதியில், ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் தங்கியுள்ளனர். இந்த விடுதியில் ஏறத்தாழ 600க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியுள்ளனர். பெரும்பாலும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் இங்கு அதிகம் தங்கியுள்ளனர்.
இவர்கள் தங்கியிருக்கும் விடுதியில் அளவுக்கு அதிகமான நபர்களை ஒரே அறையில் தங்க வைப்பதாகவும், இதனால் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பது கேள்விக்குறியாகி, ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் கூட மற்ற அனைவருக்கும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளதாக குற்றஞ்சாட்டி 100க்கும் மேற்பட்ட பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்று அதிகமாகப் பரவி வருவதால், தங்களின் நலன் கருதி வீட்டிற்கு அனுப்பிவையுங்கள் என்று கேட்டாலும், ஆட்கள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி நிர்வாகத்தினர் வலுக்கட்டாயமாக வேலை வாங்குவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிமேகலை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வீட்டிற்கு செல்ல விருப்பம் உள்ள ஊழியர்களை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் உத்தரவிட்டார். கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க:காவல் துறையினரைக் கண்டித்து எஸ்பி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்!