காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவன பேருந்து ஒன்று வேலையாள்களை ஏற்றிக்கொண்டு ராஜீவ் காந்தி நினைவு மண்டபம் அருகே சென்றுகொண்டிருந்தது.
அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, முன்னால் சென்றுகொண்டிருந்த கார் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் பின்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில், காரில் பயணித்தவர்கள் நல்வாய்ப்பாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
விபத்தில் காயம்பட்டவர்கள் மருத்துவனைக்கு அனுப்பி வைப்பு:
மேலும், கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புகளை உடைத்து தடுப்பின் மேலேறி நின்றது. இதனால், பேருந்தில் பயணம் செய்த ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதையடுத்து காயமடைந்தவர்கள் அவசர ஊரதி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவ்விபத்தினால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தனியார் நிறுவன பேருந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பின் மீது மோதி, தடுப்புகளின் மேலேறி நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருமணத்தன்று நேர்ந்த விபத்து: சோகத்தில் கிராம மக்கள்