காஞ்சிபுரம்: பெரியார் நகர் அருகேவுள்ள சுதர்சன் விரிவாக்கம் நகரைச் சேர்ந்தவர் கவிதா. இவர், வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். கவிதா தன் குடும்பத்தோடு நேற்று (செப்டம்பர் 3) உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் இன்று காலை வீடு திரும்பினார்.
அப்போது, அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 43 சவரன் தங்க நகைகள், வைர நெக்லஸ், கம்மல், ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம், வெள்ளிப் பொருள்கள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.
சிசிடிவி மூலம் விசாரணை
இது குறித்து கவிதா உடனடியாக காஞ்சி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், கைரேகை வல்லுநர்கள் உதவியுடன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். பின்னர், காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுதாகர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
தொடர்ந்து, அப்பகுதியில் இருக்கக்கூடிய கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வுசெய்த காவல் துறையினர், அதிலிருந்த காட்சிகளை வைத்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: மிளகாய்ப் பொடி தூவி நகை திருடிய பெண்: விரட்டிப் பிடித்த மக்கள்