காஞ்சிபுரம்: பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு, இருசக்கர வாகன திருட்டில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கவும்; அவர்களைக் கைது செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர் காவல் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
காணாமல் போன யமஹா ஆர்15
அதன் பேரில் காவல் துறையினர் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகே, தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் சதீஷ் என்பவரின் விலை உயர்ந்த, புதிய யமஹா ஆர்15 இரு சக்கர வாகனத்தை இரண்டு இளைஞர்கள் கடந்த ஜூலை ஏழாம் தேதி திருடி சென்றனர்.
இது குறித்து சதீஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் உதவியோடு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வலை வீசி தேடி வந்தனர்.
பிடிபட்ட கொள்ளையர்கள்
இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் நேற்று (ஜூலை 8) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், அவ்வழியே சந்தேகத்திற்கு இடமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களை மடக்கிப் பிடித்தனர்.
பின் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, காஞ்சிபுரம் நகர பகுதியில் கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட ராயக்குட்டை பகுதியைச் சேர்ந்த சின்னா (23), இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த ராகவன் (18) என தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் நடத்திய தீவிர சோதனையில், அவர்கள் இரு சக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். பின் அவர்களிடம் இருந்த இரு சக்கர வாகனமும் ஜூலை 7ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகே கொள்ளையடிக்கப்பட்ட சதிஷின் வாகனம் என தெரியவந்தது.
வாகனம் பறிமுதல்
அதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்கள் திருடிய இரு சக்கர வாகனத்தை கைப்பற்றி உரியவரிடம் ஒப்படைத்தனர். மேலும் ஒரு இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
புகார் அளித்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளைக் கைது செய்து, இருசக்கர வாகனத்தை உரியவரிடம் ஒப்படைத்த காவல் துறையினருக்கு, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அரிவாளால் தாக்கும் இளைஞர்கள்: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்!