காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன. இருந்தும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. மாவட்டத்தின் பல இடங்களில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம், பூக்கடை சத்திரம், சங்கரமடம், ரங்கசாமிகுளம், பெரியார் நகர், செவிலிமேடு ஆகிய பகுதியில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேசமயம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் வெளியே சுற்றித் திரியும் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வீட்டில் இருந்தால் மட்டுமே, கரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.