காஞ்சிபுரம்:PMK Ramadoss Speech: செவிலிமேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் பெ.மகேஷ்குமார் ஏற்பாட்டில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது.
பாமகவிற்கு வாக்களிக்காதவர்கள் தலையில் கொள்ளிக்கட்டையை போட்டுக்கொள்கிறார்கள்...!:
இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்புரையாற்றி பேசுகையில், '18 வயதுக்கு மேற்பட்ட, வாக்குரிமை உள்ளவர்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்குச்செலுத்தவில்லை என்றால் உங்கள் தலையிலேயே எரிகிற கொள்ளிக் கட்டையைப் போட்டுக்கொள்ளும் நிலை ஏற்படும்.
வன்னியர் சமுதாய மக்கள் மாறி, மாறிப் பல்வேறு கட்சியினருக்கும் வாக்களிப்பதால் தான் பெரும்பான்மையான சமூகமாக இருந்தும் நம்மால் ஆட்சிக்கு வர முடியவில்லை.
பல கட்சிகளிலும் பிரிந்துக்கிடப்பவர்கள் ஒருமுறையாவது பாமகவுக்கு வாக்களித்தால் தான், நமது கட்சியின் பலம் பிறருக்குத் தெரிய வரும். மற்ற சமுதாயத்தினர் அன்புமணி முதலமைச்சராகி விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். 3ஆவது பெரிய கட்சியாக இருந்தும் தொடர்ந்து 42 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம்.
தேர்தலில் பணம் தான் ஆளுகிறது என்றால் தேர்தலை எதற்கு நடத்த வேண்டும்..?. காசு செலவழிக்காமல் தேர்தல் நடைபெற வேண்டும். வருகிற நகர்மன்ற தேர்தலிலாவது முழுமையாகப் பாமகவுக்கு வாக்களியுங்கள்' எனப் பேசினார்.
இளைஞர்கள்,பாமகவின் கொள்கைகளைப் பரப்ப வேண்டும்:
மேலும், 'முன்னேற்றத்தை நாங்கள் கொண்டு வருகிறோம். பாமகவில் உள்ள இளைஞர்கள்,தொண்டர்களின் சக்தி அளப்பரியது. அவர்கள் வீடு,வீடாகச் சென்று மக்களிடம் பாமகவின் கொள்கைகளை, லட்சியங்களை, இதுவரைக் கடந்து வந்த பாதைகளைத் தெரியப்படுத்துங்கள், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு வழக்கில் நீதிமன்றம் தவறானத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
இது வேண்டுமென்றே செய்யப்பட்ட அநியாயமான தீர்ப்பாகும். உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து நாம் உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். வரும் பிப்ரவரி மாதத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பாமக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை ஒழிப்பதே முதல் கையெழுத்தாக இருக்கும் என அன்புமணி சொல்லி வருகிறார். மது இல்லாத தமிழ்நாடு மலர பாமகவுக்கு வாக்களியுங்கள்' எனத் தெரிவித்தார்.