வாலாஜாபாத் - காஞ்சிபுரம் மாநில நெடுஞ்சாலையில் கண்ணிகாபுரம் பகுதியில் வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்த கார் முன்னே சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயற்சித்தது.
அப்போது, காஞ்சிபுரத்தில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க சாலையின் ஓரம் திரும்பிய நிலையில், மின்கம்பம் மீது மோதி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது லேசாக மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்த நத்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்த எத்திராஜ் என்பவர் கீழே விழுந்து விட்டார். கார் மோதிய வேகத்தில் மின் கம்பமும் அவர் மீது விழுந்ததில் எத்திராஜ் மயங்கி விழுந்தார்.
இவ்விபத்து குறித்து தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர் எத்திராஜை பரிசோதித்ததில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர், 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றாமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அக்கம்பக்கத்தினர் எத்திராஜ்ஜை தண்ணீர் தெளித்து பார்த்தபோது, உயிருடன் இருப்பது தெரியவந்து. இதனை தொடர்ந்து, அவசர அவசரமாக அவரை ஷேர் ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், காரில் இருந்த ஐந்து பேர் படுகாயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரோடு இருந்தவரை இறந்ததாக கூறி ஏற்றாமல் சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் சமாதானம் செய்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இவ்விபத்து குறித்து தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.