காஞ்சிபுரம்: தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையம் சார்பில், ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தமிழ்நாட்டில் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக நேற்று (ஆகஸ்ட்.10) காஞ்சிபுரத்தில் முனிசிபல் காலனியில் வசிக்கும் தூய்மைப் பணியாளர்கள், அவர்களது குடும்பத்தாரிடம் கோரிக்கைகள், அடிப்படை வசதிகள் குறித்த குறைகளைக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் ஆலோசனை
அதன்பின் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்கள், நலத்திட்டங்கள் ஆகியவை குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள், தேவைகள் குறித்தும், நடைமுறையிலுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள், அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் கலந்தாலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வருகின்றனர், அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தூய்மைப் பணியாளர்களை ஒப்பந்தப் பணியாளராக ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டி வருகின்றன. அதிக லாபம் ஈட்டக்கூடிய இந்தப் பணிகளை ஏன் அரசாங்கமே எடுத்து செய்யக் கூடாது என தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையம் கேள்வியை முன் நிறுத்துகிறது.
ஏற்கனவே தமிழ்நாடு அரசுக்கு தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையம் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரப் பணிக்காக மாற்ற வேண்டும் அல்லது நிரந்தரப் பணியாளர்களுக்கான ஊதியம் தர வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது,
ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்
நீட் தேர்விலுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்தது போல், ஒப்பந்த தூய்மைப் பணியாளர் பாதிப்பு குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டுமென ஆணையம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் சென்னையில், சுமார் 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்த மூன்றாயிரம் தூய்மைப் பணியாளர்கள், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், அவர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை வைத்தார்.
அப்போது மா.சுப்ரமணியம் கூட அந்தப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த கோரிக்கை வைத்தார். தற்போது திமுக அரசு இதனை நிறைவேற்ற வேண்டும் என இந்த ஆணையம் கோரிக்கை வைக்கிறது.
ஒப்பந்தப் பணியாளர்களுக்கு காப்பீடுகள் இல்லை
இந்தியா முழுவதும் தூய்மைப் பணியாளர்களுக்கு காப்பீடு பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. குறிப்பாக ஒப்பந்தப் பணியாளர்களுக்கு காப்பீடுகளே இல்லை. ஒப்பந்தப் பணியாளர்களுக்கு பிடிக்கப்படும் இஎஸ்ஐ, பிஎஃப் எவ்வளவு என்று கூட அவர்களுக்குத் தெரியவில்லை.
அவர்களுக்கான காப்பீட்டுத் தொகையை ஒப்பந்ததாரரே செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மாதந்தோறும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தின் வருமான விவரத்தை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முன்கூட்டியே கசிந்ததா ரெய்டு... ஆக. 9 இரவில் வேலுமணி எங்கே?