காஞ்சிபுரம் அடுத்துள்ள குருவிமலை அருகேயுள்ள கே.எஸ்.பி. நகரில் 200-க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது, அமலில் உள்ள ஊரடங்கினால் இவர்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கின்றனர். ஏற்கனவே தயார் செய்த பட்டுச்சேலைகளை கூட்டுறவு சங்கத்தில் கொடுக்க முடியாமல் தவித்துவருகின்றனர்.
காஞ்சிபுரம் பகுதியில் கரோனா தொற்று அதிகமாக உள்ளதால் நகரத்துக்குள் செல்ல இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பட்டுச்சேலைகளுக்கான மூலப்பொருள்களை பெறமுடியாமலும் தவித்து வருகின்றனர். மேலும், இவர்களில் 10 குடும்பத்தினர் மட்டுமே தமிழ்நாடு நெசவாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனர்.
இதன்காரணமாக நெசவாளர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்த கரோனா நிவாரணம் அந்த 10 குடும்பத்தினருக்கு மட்டுமே கிடைத்துள்ளது.
'நாங்களும் தலைமுறை தலைமுறையாக நெசவுத்தொழிலையே செய்துவருகிறோம். ஆனால், எங்களில் பெரும்பாலோனோர் தமிழ்நாடு நெசவாளர் நலவாரியத்தில் பதிவு செய்யாததால் அரசு அறிவிக்கும் எந்த நிவாரணமும் எங்களுக்கு கிடைக்கவில்லை' என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் உள்ள நெசவாளர்கள் குடும்பத்தினருக்கு அரசு தலா ஐந்து ஆயிரம் ரூபாய் கரோனா நிவாரணமாக வழங்கவேண்டும் என்று இப்பகுதி நெசவாளர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கொரோனாவால் வந்த கொடுமை' - நெசவாளர்களின் குமுறல்