காஞ்சிபுரம்: பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் இன்று (மார்ச் 9) தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மகேஸ்வரி ரவிக்குமார் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்றார். வரும் தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் வாக்காளர்கள் உறுதிமொழியை ஏற்றனர். தொடர்ந்து, ஹுண்டாய் தொழிற்சாலையில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்களுக்கு மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் முத்துதேவன், ஹுண்டாய் நிறுவனத்தின் முதுநிலை துணைத் தலைவர் (மனிதவளம்) ஸ்டீபன் சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவக்கம்