காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட 51 வார்டு பகுதிகளிலும் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களான காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் ஆகியவை விற்பனை செய்ய 88 நடமாடும் அங்காடிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பெரு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகை அளவிற்கு ஏற்ப காய்கறிகள் கிடைக்கவில்லை என பெருநகராட்சி நிர்வாகத்திற்குப் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் 88 வாகனங்களில் காய்கறிகள், பழங்கள், மளிகைப்பொருள்கள் விற்பனை நடைபெற்று வரும் நிலையில் கூடுதலாக நாற்பது வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் , மளிகைப் பொருள்கள் விற்பனை செய்ய பெரு நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் வைத்து நடமாடும் காய்கறிகள், பழங்கள், அங்காடிகளுக்குத் தேவையான காய்கறிகள் பழங்களை விற்பனைக்காகப் பிரித்து அனுப்பி வைக்கும் பணிகள், பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி கூறியதாவது, "விவசாயிகள் மொத்த வியாபாரிகளிடமிருந்து காய்கறிகளை வாங்கிச் செல்ல, நடமாடும் அங்காடி வியாபாரிகள் அதிகாலை ஐந்து மணிக்கே வந்து காய்கறிகள், பழங்களை வாங்கிச் சென்று பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
அதேபோல் பெரு நகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ள விலைப்பட்டியலைத் தவிர கூடுதல் விலைக்கு காய்கறிகள், பழங்களை விற்பனை செய்யக்கூடாது" என நடமாடும் அங்காடி வியாபாரிகளை கேட்டுக்கொண்டார்.