காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு ஜரிகை தொழிற்சாலையை, தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஆர்.காந்தி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ஜரிகை முறைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
ஆய்வுக்குப் பின்னர், காஞ்சிபுரம் காந்தி சாலையிலுள்ள முதன்மை பட்டு கூட்டுறவு விற்பனை சங்கங்களுக்கு சென்று, அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டார்.
அங்கு விற்பனை செய்யப்படும் பட்டு சேலைகளின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
பட்டு சேலை நெசவு குறித்து பார்வை
அப்போது தேசிய விருது பெற்ற நெசவாளருக்கு, அமைச்சர் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அதற்கடுத்து நெசவாளர்கள் அதிகம் நிறைந்த பிள்ளையார்பாளையம் பகுதியிலுள்ள நெசவாளர் வீட்டிற்கு சென்ற அமைச்சர், பட்டு சேலை நெசவு செய்வதை நேரில் பார்வையிட்டார்.
நெசவாளர்களின் பட்டு நெசவு கூலி, இதர கோரிக்கைகளையும் அமைச்சர் ஆர்.காந்தி கேட்டறிந்தார். ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் ஆர்.காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாக இயக்குனரை மாற்ற தேவையில்லை
அப்போது அவர் பேசுகையில், “நிர்வாக இயக்குனரை இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மாற்ற வேண்டிய அவசியமில்லை. பணியில் திறமையாக இருந்தால் மட்டும் போதும். தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக காஞ்சிபுரத்திற்குதான் ஆய்வுக்கு வந்துள்ளேன்.
4,550 சில்க் மார்க் ஜரிகைகள் உற்பத்தி செய்ய நடவடிக்கை
தற்போது இங்கு செயல்பட்டுவரும் ஜரிகை தொழிற்சாலையில் 3 ஆயிரம் சில்க் மார்க் ஜரிகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இதனை 4 ஆயிரத்து 550 சில்க் மார்க் ஜரிக்கைகளாக உற்பத்தி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதனால் வெளியில் இருந்து வாங்கப்படும், 2 ஆயிரம் சில்க் மார்க் ஜரிக்கைகள் குறைக்கப்படும்.
அண்ணா பட்டுக் கூட்டுறவு வளாகம் புதுப்பிப்பு
காஞ்சிபுரத்தில் போலி பட்டு சேலைகள் தயாரிக்கப்படுவது குறித்து, முறையான புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். காஞ்சிபுரத்திலுள்ள அண்ணா பட்டுக் கூட்டுறவு வளாகம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் செயல்படும்” என்றார்.
ஆய்வில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அரசு முதன்மை செயலாளர் அபூர்வா, ஆணையர் பீலா ராஜேஷ், ஆட்சியர் டாக்டர் எம். ஆர்த்தி, காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் ஜி. செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.சுந்தர், சிவிஎம்பி எழிலரசன், உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: விரைவில் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு - பழனிவேல் தியாகராஜன்