காஞ்சிபுரம் மாவட்டத்தில், நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு வருகிறது. கடந்த சில தினங்களாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக கரோனா தொற்று குறைந்து வருகிறது.
இந்நிலையில், கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்டவைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில், பெரும்பாலான நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் குறைவு காரணமாகப் பெரிதும் அவதியுறும் நிலையில், போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், தங்களது சமூக பங்களிப்பு நிதியிலிருந்து மருத்துவ உபகரணங்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதனடிபடையில், ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டையில் கார் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையான மோபீஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், முகக்கவசம், ஆக்ஸிஜன் ரெகுலேட்டர்கள், மொபைல் எக்ஸ் ரே, படுக்கைகள், மெத்தை உள்ளிட்டவைகள் அடங்கிய ரூபாய் ஒரு கோடியே 40 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை அந்நிறுவனம் மனிதவள மேம்பாட்டுத் தலைமை நிர்வாகி பிரேம் சாய், நிதித்துறை தலைமை அலுவலர் செந்தில் ராஜ்குமார், சமூக பங்களிப்புக் குழு பொறுப்பாளர் ஜானகிராமன் ஆகியோர் இன்று (மே. 31) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிறுவனம் நன்கொடையாக அளித்த மருத்துவ உபகரணங்களை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை, தாலுகாவில் செயல்படும் அரசு மருத்துவமனை, கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் தேவைக்கேற்ப பயன்படுத்துமாறு அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கருப்பு பூஞ்சை: புதுச்சேரியில் பெண் ஒருவர் உயிரிழப்பு!