காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த மதூரில் தனியாருக்கு சொந்தமான ஆறுபடை கல் குவாரியில் நேற்று முன்தினம் (பிப். 04) காலையில் 200 அடி பள்ளத்தில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் லாரிகள், பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் பணியில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக மேல் இருந்து மண், கல் திடீரென சரிந்து கோர விபத்து ஏற்பட்டது.
இதில், டிராக்டர் ஒட்டுநர் மணிகண்டன் என்பவர் மண் சரிவில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் மீட்க்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், வட மாநில தொழிலாளர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
அதிக அளவில் மண், கற்கள் சரிந்ததில் பணியிலிருந்த பொக்லைன் இயந்திரம், லாரிகள், டிராக்டர்கள், டிசல் டேங்கர் லாரி ஆகியவை இடிபாடுகளில் சிக்கி கொண்டன. இதையடுத்து, நேற்று முன்தினம் (பிப்.04) முதல் நடந்து வந்த மீட்பு பணிகள் நேற்று(பிப்.5) இரண்டாவது நாளாகவும் நடைபெற்றது. அதில், 5 டாரஸ் லாரிகள், 5 டிராக்கடர், 2 ஜேசிபி இயந்திரங்கள், ஒரு டீசல் டேங்கர் லாரியியும் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று(பிப்.6) மூன்றாம் நாளாக கல்குவாரி இடிபாடுகளை அகற்றும் பணியை தொடங்குவதற்கு மூன்று ஜேசிபி இயந்திரங்கள் வந்தன. ஆனால், அப்பகுதியில் மீண்டும் மேலிருந்து மண் சரிவு அவ்வப்போது ஏற்படுவதால் இடிபாடுகளை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டு மீட்புப்பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இருப்பினும், கல்குவாரியில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தின் அருகாமையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள மண், பாறைகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கல்குவாரி இடிபாடுகளில் மேலும் சில டிராக்டர்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மண் சரிவுகள் முழுமையாக நின்றப் பிறகு தான் இடிபாடுகள் முற்றிலுமாக அகற்றப்படும். அதன் பின்னரே இவ்விபத்தின் முழு விவரங்கள் தெரியவரும். தொடர்ந்து இப்பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மதூர் கல்குவாரி விபத்து: தாமதமாகத் தொடங்கிய மீட்புப் பணிகள்!