கரோனா தடுப்பு நடவடிக்கையாக திரையரங்குகள் உள்ளிட்டவற்றை திறக்க அரசு தடை விதித்தது. இதனால் கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட்டன.
இதற்கு முன்பு சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் ஓடிடி இணையதளம் மூலம் வெளிவந்தன. பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் 9 மாதங்களாக திரையிடப்படாமல் இருந்தன. கடந்த வாரம் நடிகர் விஜய் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளிக்கக் கோரினர். அதன்படி அரசும் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளித்தது.
இதற்கிடையில் மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததால், மீண்டும் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படவும், வேண்டுமென்றால் கூடுதல் காட்சிகள் இயக்கவும் அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் (ஜன.13) தமிழ்நாடு முழுவதும் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியாகயுள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள பாபு, கார்த்திகேயன், அருணா உள்ளிட்ட பிரபல திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படம் டிக்கெட்கள் முன்பதிவு இன்று (ஜன.11) முதல் தொடங்கியது. இதில் அதிகாலை 4:00 மணி காட்சிக்கு டிக்கெட் ஆயிரம் ரூபாயும் , காலை 7:30 மணி காட்சிக்கு 500 ரூபாயும், மீதமுள்ள காட்சிக்கு 300 ரூபாயும் வசூலிக்கப்படுவதாக தெரிகிறது. அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீறி அதிக கட்டண கொள்ளையில் ஈடுபடும் திரையரங்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: முரட்டுத்தனமாக மோதிக்கொள்ளும் விஜய்- விஜய் சேதுபதி!