காஞ்சிபுரம்: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சீரமைப்போம் தமிழ்நாட்டை என்ற வாசகத்தை முன்னிறுத்தி இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் ஓர் பகுதியாக காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்தார்.
காஞ்சிபுரம் தேரடி பகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு குமரக்கோட்டம் முருகன் கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அவருக்கு அளிக்கப்பட்டது.
அதனை நடிகர் கமல்ஹாசன் ஏற்க மறுத்து விட்டு சால்வை மட்டும் அணிந்து கொண்டார். பின்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு சென்ற நடிகர் கமல்ஹாசனுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து குங்குமம் இட்டு அண்ணா வீட்டுக்கு அவரை வரவேற்றனர்.
அங்கு பேரறிஞர் அண்ணாவின் சிலை அருகே நின்று புகைப்படம் எடுத்து கொண்ட கமல், நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் புகைப்படங்களை பார்வையிட்டார். அதனையடுத்து அங்கிருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் நெசவாளர்கள் அதிகமிள்ள பகுதியான பிள்ளையார்பாளையம் பகுதியில் நெசவாளர் வீட்டிற்கு நேரில் சென்று அவர்கள் பட்டு சேலையை எப்படி உற்பத்தி செய்கிறார்கள் என்றும், நெசவாளர்களின் கோரிக்கைகளையும் நெசவாளர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால், பட்டுப் பூங்கா உள்ளிட்ட நெசவாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து, அங்கிருந்து புறப்பட்டு கீழ் அம்பி பகுதியிலுள்ள விவசாயிகளை சென்று நேரில் சந்தித்து விவசாயம் சார்ந்த பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பிரச்சாரதை முடித்து கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தை நோக்கி தனது பிரச்சார பயணத்தை மேற்கொண்டு சென்றார்.
இதையும் படிங்க: நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்துவிட்டு நகைக்கடையில் கொள்ளை முயற்சி!