காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு கூட்ரோடு பகுதியில் இரு சக்கரம் மற்றும் கார்களுக்கான வயரிங் தயாரிக்கும், தனியார் உற்பத்தி தொழிற்சாலை ஒன்பது வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் வாலாஜாபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் என மூன்று சிப்ட்கள் வீதம் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இத்தொழிற்சாலையில் நேற்று (அக்.7) இரவு சிப்ட்டில் வேலை செய்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கேண்டினில் உணவை சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து 60க்கும் மேற்பட்டோர் உடனடியாக தொழிற்சாலை பேருந்து மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கும், வாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சற்று கடுமையாக பாதிக்கப்பட்ட சில பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டும், மீதமுள்ளவர்கள் பொது பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிக பாதிப்புக்குள்ளான சுமார் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலுள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே இரவு நேர சிப்ட் நிறுத்தப்பட்டு தொழிலாளர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காஞ்சிபுரம் காவல் உட்கோட்ட டி.எஸ்.பி.ஜூலியர் சீசர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!!