உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரையில் ஆறாயிரம் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் முதற்கட்டமாக 792 மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு, 12 கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டு மனை பட்டா, இஸ்திரி பெட்டிகள், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் மூன்று சக்கர வாகனங்கள், குடும்ப அட்டை, விவசாய மின் இணைப்புக்காண ஆணைகள், புதிய சாலை வசதிகள், மாவட்ட தொழில் மையம் சார்பில் மானியத்துடன் கூடிய தொழில் கடன், உதவித்தொகைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கி இத்திட்டத்தினை கடந்த 3ஆம் தேதியன்று தொடங்கிவைத்தார்.
இதையடுத்து இத்திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெறப்பட்ட ஆறாயிரம் மனுக்களில் தற்போது மீதமுள்ள மனுக்களில் தகுதியுடையவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். ஆர்த்தி தலைமையில் இன்று (ஜூன்.21) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு பேசிய மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி, பெறப்பட்ட மனுக்களில் தகுதியுடையவர்களுக்கு அனைத்து வகையான அரசு நலத்திட்ட உதவிகளை சீரிய முறையில் உடனடியாக வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும் என்றும், மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை முழு வீச்சில் ஆராய்ந்து தகுதியுடைய பயனாளிகளின் கோரிக்கையை உரிய முறையில் நிறைவேற்றிடவும் அலுவலர்களுக்கு வேண்டுக்கோள் விடுத்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசுதா, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாச்சியர் ராஜலட்சுமி, காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.