காஞ்சிபுரம்: மாவட்டம், உத்தரமேரூர் தாலுகா சிறுதாமூர் பட்டாகிராமத்தில் உள்ள தனியார் கல் குவாரியில் ஜுன் 7ஆம் தேதி இரவு மண் சரிவு ஏற்பட்டது.
இதில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுனில் சேஷாத்ரி (19), மத்தியப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஷர்கான் (30 ) ஆகிய 2 வடமாநிலத் தொழிலாளர்கள் மண்ணில் புதையுண்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் கல்குவாரியில் மூன்று பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண்சரிவை அகற்றினர். முதற்கட்டமாக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுனில் சேஷாத்ரியின் சடலம் மீட்கப்பட்டது. மற்றொருவரின் உடலைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மீட்புப் பணிகள் குறித்து காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி சத்யப்பிரியா நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "தனியார் கல் குவாரியில் உயிரிழந்த சுனில் சேஷாத்ரி உடல் மீட்கப்பட்டுள்ளது. கல்குவாரி ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
இதையும் படிங்க: காவலர்களால் மீட்கப்பட்ட பிச்சைக்காரரிடம் கத்தி: குமரியில் பரபரப்பு