சக்தி பீடங்களில் முதன்மையானதும், உலக பிரசித்திபெற்றதுமான காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் 9ஆம் நாளான இன்று (பிப்.26) காலை காமாட்சியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி பத்ரபீடம் வாகனத்தில் எழுந்தருளினார்.
அதையொட்டி காமாட்சி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, நீலம், சிவப்பு பட்டு உடுத்தி மல்லிகை பூ மாலை, உலர் திராட்சை மாலை, செண்பகப் பூ மாலை, பாதாம், பிஸ்தா மாலை அணிவித்து வெள்ளித் தேரில் லஷ்மி, சரஸ்வதி தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் காமாட்சி அம்மன் எழுந்தருளினார்.
பின்னர் மேளதாளங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க பக்தர்களுக்கு காட்சியளித்தப்படி நான்கு மாட ராஜ வீதிகளில் பக்தர்கள் வெள்ளித் தேரை வடம் பிடித்து இழுக்க பக்தர்களின் வெள்ளத்தில் காமாட்சியம்மன் திருவீதி உலா வந்தார்.
வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து வெள்ளித் தேரில் வீதி உலா வந்த காமாட்சி அம்மனை தரிசனம் செய்து வணங்கி சென்றனர். வெள்ளித்தேர் உற்சவத்தையொட்டி ஆங்காங்கே பக்தர்களை கவரும் வகையில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.