தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மருத்துவக்கல்லூரி உருவாக்கப்படும் என்பது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பு. அதனை நிறைவேற்றும் வகையில் மக்கள் நல்வாழ்வு துறை இந்தாண்டு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்றுவதற்கு மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு விண்ணப்பித்தது.
அதன் அடிப்படையில் முதல்கட்டமாக திருப்பூர், நீலகிரி, நாமக்கல், திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் மத்திய அரசின் நிதி உதவியுடன் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆறு மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
அதேபோல் கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரி உருவாக்குவதற்கு மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு தமிழ்நாடு அரசு விண்ணப்பம் செய்தது. அதனை ஏற்றுக்கொண்டு மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை மூன்று மாவட்டங்களில் மத்திய அரசின் நிதியுதவியுடன் மாவட்ட அரசு மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்றுவதற்கு அனுமதி அளித்துள்ளது.
மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும், ஏற்கனவே உள்ள கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளாக மாற்றுவதற்கு மத்திய அரசிடம் விண்ணப்பித்தது. மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு துறை ஜனவரி 27ஆம் தேதி கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு மத்திய அரசிடம் விண்ணப்பித்தது. ஆனால் கடலூர் மற்றும் காஞ்சிபுரத்தில் ஏற்கனவே மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. எனவே இந்த ஆண்டு அனுமதி வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடலூர், காஞ்சிபுரத்தில் வரும் காலத்தில் இது குறித்து பரிசீலிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் கூறியதாவது,
செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கண்டிப்பாக மருத்துவக்கல்லூரி வழங்கப்படுமென முதலமைச்சர் அறிவித்திருந்தார். ஏற்கனவே அவர் அறிவித்த கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி ,அரியலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு அனுமதி கேட்டதில் மத்திய அரசு இரண்டு மாவட்டத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் நாங்கள் கேள்வி எழுப்பியபோது, ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் காஞ்சிபுரம் உள்ளதால் அதற்கு வாய்ப்பில்லை என அப்போது கூறப்பட்டது. ஆனால் செங்கல்பட்டு மாவட்டத்தை தற்போது தனியாக பிரித்து காஞ்சிபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட பின்னர் கண்டிப்பாக மருத்துவக்கல்லூரி வருமென உறுதியாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி வழங்கப்படாது என கூறப்பட்டுள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்றார்.
இதையும் படிங்க:'அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொன்னது பொய்' - மன உளைச்சலில் சிவகாசி சிறுமியின் குடும்பத்தார்