குன்றத்தூர் அடுத்த நத்தம், ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் சசிகுமார் (36), பால் விற்பனை செய்துவந்தார். இவரது மனைவி நளினி. இவர்களுக்குத் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (பிப். 26) சசிகுமார் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதைக் கண்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின் சசிகுமாரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சசிகுமார் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து குன்றத்தூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் இறந்துபோன சசிகுமாரின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அவ்விசாரணையில், பால் வியாபாரம் செய்துவரும் சசிகுமார், திருமுடிவாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பால் ஊற்றுவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று, அங்கு ஒரு வீட்டில் இருந்த கயிற்றை உடன் வந்த நபர் எடுத்துவந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை அங்கிருந்த குடியிருப்புவாசி ஒருவர் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சியைப் பார்த்துவிட்டு, சசிகுமாரை குடியிருப்புவாசிகள் முன்னிலையில் திட்டியதாகவும், இனி இங்கே ஒரு வாரத்திற்கு பால் ஊற்றக் கூடாது என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துவந்த சசிகுமார் தற்கொலை செய்துகொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனவே இது குறித்து குன்றத்தூர் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர். இச்சம்பவம் அக்குடும்பத்திற்குப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கடையில் பூட்டை உடைத்த திருடன்- 4 மணி நேரத்தில் கைது!