காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிற்சாலைகள் கட்டுமானப் பணிகளுக்கு தேவையான இரும்பு கம்பிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று இரவு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தொழிற்சாலையில் இருந்த பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் ஏற்பட்ட அதிர்வில் தொழிற்சாலையில் இருந்த கண்ணாடி ஜன்னல்கள் சுக்குநூறாகின, தொழிற்சாலையின் மேற்கூரைக்காக போடப்பட்டிருந்த இரும்பு ஆங்கில் உடைந்து சிதறியுள்ளது.
விபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அகிலேஷ், சுரேந்தர், தினேஷ் ஆகிய 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும், படுகாயமடைந்த 8 பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த பெருநகர போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர், விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.