காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த நெமிலி சாலையில் பெட்டிக்கடை நடத்திவருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் தொழிலாளிகள் சுத்தம் செய்துவிட்டுச் சென்றுள்ளனர்.
அதன்பின் அவர்கள் சரியாக சுத்தம் செய்திருக்கிறார்களா என்பதை பார்ப்பதற்காக அந்த தொட்டிக்குள் கிருஷ்ணமூர்த்தி இறங்கியுள்ளார். அப்போது விஷவாயு தாக்குதலுக்கு உள்ளான அவர், கத்தி கூச்சலிட்டுள்ளார்.
அவரின் அலறல் சத்தத்தைக் கேட்ட அவரது மகன்கள் கண்ணன், கார்த்தி, அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்த பரமசிவம், லக்ஷ்மிகாந்தன் மற்றும் வடமாநில இளைஞரான சுரதாபிசி ஆகிய ஐந்துபேரும் ஒருவர் பின் ஒருவராக தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். அப்போது, ஆறு பேருமே விஷவாயு தாக்குதலுக்கு உள்ளாகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயர சம்பவம் அறிந்து வந்த காவல் துறையினர், தீயணைப்புத் துறையினரின் உதவியோடு இறந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த லக்ஷ்மிகாந்தன் என்பவரது கண்களை தானம் செய்திட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முடிவு செய்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.