காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் எழிலரசனுக்கு ஆதரவாக மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ.குருவின் மகள் விருதாம்பிகை தனது கணவருடன் பரப்புரை மேற்கொண்டார்.
அதன்படி, திருப்பருத்திக்குன்றம் பகுதியில் பேசிய அவர், "எனது தந்தை குருவின் மரணத்தில் சந்தேகம் எழவே, தற்போது அதற்கு நீதி கேட்டு நான் பரப்புரையில் ஈடுபட்டுள்ளேன். தேவைப்பட்டால் தைலாபுரத்தில்கூட பரப்புரை மேற்கொள்வேன்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து, "இலவசக் கல்வி எனக் கூறும் பாமக நிறுவனர் அவரது அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலித்து மாணவர்களை சேர்த்து வருகிறார்" எனக் குற்றம் சாட்டினார். மேலும் "தனது கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்போம் எனக் கூறும் ராமதாஸின் கூட்டங்களுக்கு வரும் தொண்டர்களை மது அருந்த வேண்டாம் என்று கூற அவர் மறுப்பது ஏன்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அவர் பரப்புரையில் பேசிக்கொண்டிருக்கும்போது பாமக நபரொருவர் "நீங்கள் பேசக் கூடாது. நீங்கள் எங்களது குடும்ப உறவு. திமுகவினர் மட்டுமே பரப்புரை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் இருவரும் பரப்புரை மேற்கொள்ளக் கூடாது" என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அவரை அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.