காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனோ வைரஸ் தொற்று அதிகரித்துவருகிறது. அதிலும், குறிப்பாக குன்றத்தூர், மாங்காடு, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நோய்த் தொற்று பாதிப்பு தொடர்ந்து உயர்ந்துவருகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளிலும் நோய்த் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு, தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டுவருகிறது. அதன்படி காஞ்சிபுரம் பெருநகராட்சி ஊழியர்களுக்கு நோய்த் தடுப்பு பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியை மேற்கொள்ளவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக்கூடிய கபசுரக் குடிநீர் வழங்கும் பணியையும் மேற்கொள்ளவும் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
இதையடுத்து பெருநகராட்சி ஊழியர்கள் நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாகனங்கள் மூலம் கிருமிநாசினி தெளித்தும், அப்பகுதி மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கியும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.