காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளின் 'தேசம் காப்போம்' மாநாட்டின் ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டைப் பகுதியில் நடைபெற்றது.
பின்னர் திருமாவளவன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், 'படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று வருமான வரித்துறையினர் சோதனை செய்வது புதிய நடைமுறையாக உள்ளது. இது முற்றிலும் அரசியல் நடவடிக்கையாகத் தான் கருதவேண்டியுள்ளது. இந்தப் போக்கு நாட்டுக்கு நல்லதல்ல. ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. வருமானவரித்துறை சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். ஆளுங்கட்சி தூண்டுதலுக்கு ஏற்ப செயல்படுவது என்பது ஒட்டுமொத்த தேசத்துக்கு எதிரானது. இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாகக் கருதுகிறேன்.
நடிகர் விஜய்யை தங்கள் பக்கம் வளைத்துப் போட வேண்டும் என்று எண்ணி, அவர்கள் இவ்வாறு செயல்படுவதாகத்தான் நான் கருதுகிறேன். இப்படி மிரட்டல் விடுத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எண்ணியே இப்படி 'பிளாக் மெயில்' பண்ணுகிறார்கள்.
தேர்வாணையம் மூலம் நடைபெற்ற அனைத்து வேலைவாய்ப்புகளும் ஊழல் இன்றி, நியாயமான முறையில் நடந்திருக்குமா என்கின்ற சந்தேகம் தமிழ்நாடு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்வாணையம் மூலம் நடைபெற்ற தேர்வு முறைகேடு விவகாரத்தில், உடனடியாக நீதி விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
காங்கிரஸ், பாஜக என எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு சிகப்புக் கம்பளம் விரிப்பார்கள். இந்திய அரசின் வெளிவிவகார கொள்கை எப்போதும் தமிழ் சமூகத்திற்கு எதிராகவே உள்ளது என மீண்டும் மீண்டும் தமிழ் மக்களுக்கு உணர்த்தி வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சி மாறி பாஜக பதவிக்கு வந்தால், தமிழ் மக்களுக்கு நல்லது நடக்கும் என்ற கருத்து மக்கள் மனதில் பதிய வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அது உண்மையில்லை என மோடி அரசு நிரூபித்துள்ளது. ராஜபக்சவுக்கு மத்திய அரசு வரவேற்பு அளிப்பது புதிதல்ல. இருந்தாலும், அது தமிழர்களுக்கு வேதனை அளிக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது' இவ்வாறு கூறினார்.
இதையும் படிங்க : ஃபோர்ப்ஸின் 30 வயதுக்குள் டாப் 30 இந்தியர்கள் பட்டியலில் 'சாய் பல்லவி'