காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது பானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்ந நிலையில் காஞ்சிபுரம் கீழம்பி சாலையில் பாலுசெட்டி சத்திரம் காவல் துறையினர் திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த ஷேர் ஆட்டோவில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த சிறு காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், ஹரிஹரன், கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பிரபு, தினேஷ்குமார், ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் மதுபானங்களை திருட்டுத்தனமாக விற்பனைக்கு எடுத்துச்சென்றதை அறிந்து அவர்களிடமிருந்த 284 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன் பின்னர் காவல் துறையினர் நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோல் வாலாஜாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னையன் சத்திரம், கருக்குப்பேட்டை பகுதிகளில் மது பானங்களை திருட்டுத்தனமாக விற்பனைக்கு வைத்திருந்த அர்ஜூனன் ராஜ், கமால் பாஷா ஆகிய இருவரையும் வாலாஜாபாத் காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 70 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளத்தனமாக கள்ளச்சாராயம், அரசு மதுபானங்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.