சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவில் பணியாற்றி வந்த ஐஜி பொன். மாணிக்கவேல் கடந்த ஆண்டு பணி நிறைவு பெற்றார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஓராண்டு சிறப்பு அதிகாரியாக சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவில் பணியாற்ற உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் அவரின் பதவிக்காலம் இந்த மாதம் இறுதிக்குள் நிறைவடைகிறது.
இந்நிலையில், பொன். மாணிக்கவேலின் பதவிக்காலத்தை மீண்டும் நீட்டிக்க வேண்டுமென, காஞ்சிபுரத்தில் சில பக்தர்கள் சார்பில் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை, ஏலவார் குழலி சிலைக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
சிறப்பு ஆராதனைகள் முடிந்த பிறகு பிரசாதம் வழங்கப்பட்டது. ஐஜி பொன்மாணிக்கவேல் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரியாக பணியாற்றி வருவதால், வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் பல தொன்மையான சிலைகள் கடத்தப்பட்டதை மீட்டுத் தந்துள்ளார்.
இதனால் அவர் பணி நீடித்தால் இன்னும் கடத்தப்பட்ட பல சிலைகளை மீட்டுக்கொண்டு வருவார் என்று கூறி பொன்.மாணிக்கவேலின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என காஞ்சிபுரம் சிவ பக்தர்கள் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பிரபுதேவா மிரட்டும் 'பொன் மாணிக்கவேல்' - ரிலீஸ் தேதி அறிவிப்பு