காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறுப் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, இயன்முறை சிகிச்சைப் பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டப் பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. இந்த மருத்துவமனைக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அருகில் உள்ள ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகளும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இம்மருத்துவமனையில் அவசர சிகிச்சை மையம் அருகே எக்ஸ்ரே மையம் செயல்படுகிறது. இங்கு சாதாரண மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரங்கள் மூலம் நோயாளிகளின் பாதிப்புகளைக் கண்டறிகின்றனர். இந்த எக்ஸ்ரே மையத்தில் கதிர் வீச்சின் வீரியம் அதிகம் இருக்கும் என்பதால், இந்த ஊழியர்கள் தினமும் 5.30 மணி நேரம் என ஆண்டுக்கு 11 மாதங்கள் மட்டுமே பணி புரிய வேண்டும் என்பது விதி. அதன்படி, ஒரு எக்ஸ்ரே மையத்தில் 24 மணி நேரமும் பணி செய்ய குறைந்தபட்சம் 10 ஊழியர்கள் இருக்க வேண்டும்.
ஆனால், இங்கு ஒரே ஒரு கதிர்வீச்சு நிபுணர் மட்டுமே பணிபுரிகிறார். திருப்புட்குழி, மதுரமங்கலம் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார மையங்களில் பணிசெய்யும் கதிர்வீச்சு நிபுணர்களை சுழற்சி முறையில் இங்கு பணிபுரிய வைத்துள்ளனர். இங்கு மூன்று ஷிப்ட்களில் 24 மணி நேரமும் எக்ஸ்ரே எடுக்க நிபுணர்கள் இல்லாததால் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அதேபோல், மருத்துவமனையில் உள்ள எக்ஸ்ரே இயந்திரம் பழுதடைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் இரண்டு எக்ஸ்ரே அறைகள் உள்ளன. முதல் அறையில், உள்ள எக்ஸ்ரே இயந்திரம் கடந்த 2012ஆம் ஆண்டு 1.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டு, 11 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. இதுவரையில் 4.5 லட்சத்துக்கும் மேலான எக்ஸ்ரேக்களை எடுத்துள்ளது. தற்போது இந்த இயந்திரத்தின் சில பாகங்கள் பழுதடைந்துள்ளதால், அதனை இயக்குவதற்கு தாமதமாகிறது. மிகவும் பழைய இயந்திரம் என்பதால், அதனுடைய உதிரி பாகங்களும் கிடைக்கவில்லை எனத்தெரிகிறது.
அதேபோல், கடந்த 6 வருடங்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் ஒன்று சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எக்ஸ்ரே இயந்திரம், ஸ்கேன் அல்ட்ரா ஃபோனோ கிராம் இயந்திரம் உள்ளிட்ட ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பல மருத்துவ உபகரணங்களை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு இலவசமாக அளித்தது. இந்த எக்ஸ்ரே இயந்திரத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சுமார் 110 நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. இந்த புதிய எக்ஸ்ரே இயந்திரம் பல நாட்களாக இயங்கவில்லை.
இது தொடர்பாக குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டபோது, முப்பதாயிரம் ரூபாய் செலுத்தினால், தாங்கள் நேரில் வந்து பழுது பார்ப்பதாகக் கூறியுள்ளனர். இந்தப் புதிய எக்ஸ்ரே இயந்திரத்தை நன்கொடையாக பெற்ற நாள் முதல் இது வரையில் AMC எனப்படும் வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தத்தை மருத்துவமனை நிர்வாகம் முறையாகப் போடாததால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் நேரில் சென்று பழுது பார்க்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக பலமுறை மருத்துவமனை நிர்வாகத்துக்குப் புகார் அளித்தும், சுகாதாரத்துறை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்றும், இது நாள் வரையில் ஏஎம்சி போடுவதற்கான எந்தவிதமான முயற்சியும் எடுக்கப்படவில்லை.
பழைய எக்ஸ்ரே இயந்திரம் மோசமான செயல்பாட்டிலும், புதிய எக்ஸ்ரே இயந்திரம் செயல்படாமலும் இருப்பதால், எக்ஸ்ரே எடுக்க முடியாமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக இந்த இரண்டு எக்ஸ்ரே இயந்திரங்களையும் சீரமைக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு கூடுதலாக இரண்டு எக்ஸ்ரே இயந்திரங்களையும் வழங்க, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரச் சேவைகள் துறை ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: Nursing Application: நர்ஸிங், பிபார்ம் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!